‘கஜா’ புயலால்: இடிந்து விழுந்த 67 பள்ளி கட்டிடங்கள் - கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்


‘கஜா’ புயலால்: இடிந்து விழுந்த 67 பள்ளி கட்டிடங்கள் - கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 9:15 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் 67 பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய ‘கஜா’ புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன்காரணமாக 250-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் செந்துறை அரசு மேல் நிலைப்பள்ளி, கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் பள்ளி சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்துள்ளன. பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சில இடங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அந்தந்த பள்ளி ஆசிரியர்களே கருவிகளை கொண்டு மரங்களை அகற்றி வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஆசிரியர் கள் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து அரசு பள்ளிகளின் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ‘கஜா’ புயலால் சேதமடைந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கட்டிடங்களின் விவரங்களை உடனடியாக புகைப்படத்துடன் அனுப்புமாறு தலைமை ஆசிரியர் களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட பள்ளி சேத விவரங்களை தொகுத்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 உயர்நிலைப்பள்ளிகள் உள்பட 67 பள்ளிகளில் 48 வகுப்பறை கட்டிடங்கள், 41 மேற்கூரைகள், 18 சுற்றுச்சுவர்கள் சேதமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய கலெக்டர், நேரில் ஆய்வு செய்து சேத மதிப்பை கணக்கிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் 67 பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுப்பணிகள் முடிந்தவுடன் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தெரிவித்தார்.

Next Story