சின்னசேலம் அருகே விபத்து தடுப்புக்கட்டையில் கார் மோதி: மனைவி, மகளுடன் அணுமின் நிலைய அதிகாரி பலி - டிரைவரும் உயிரிழந்த பரிதாபம்
சின்னசேலம் அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் மனைவி, மகளுடன் அணுமின் நிலைய அதிகாரி பலியானார். இந்த விபத்தில் கார் டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சின்னசேலம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் டவுன்ஷிப் முதலாவது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 57). இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாலினி(48). இவர்களுக்கு ரம்யா(17) என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் ஈரோட்டில் உள்ள தேவநாதனின் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக தேவநாதன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி தேவநாதன், மாலினி, ரம்யா ஆகியோர் ஒரு காரில் நேற்று காலை 5 மணி அளவில் கல்பாக்கத்தில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டனர். காரை கல்பாக்கம் காஜா நகரை சேர்ந்த பாபு என்கிற பவுசல் ரஹீம்(40) என்பவர் ஓட்டிச் சென்றார்.
காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த தேவநாதன், மாலினி, ரம்யா, டிரைவர் பாபு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான 4 பேரின் உடல்களை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான தேவநாதன் உள்ளிட்ட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story