தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் - பசு மாட்டை கடித்துக்கொன்றது


தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் - பசு மாட்டை கடித்துக்கொன்றது
x
தினத்தந்தி 22 Nov 2018 4:00 AM IST (Updated: 22 Nov 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தைப்புலி பசுமாட்டை கடித்துக்கொன்றது.

தாளவாடி,

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, மான், கரடி, செந்நாய், குரங்குகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை, சிறுத்தைபுலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை சிறுத்தைபுலி ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்ததோடு கூச்சலிட்டனர். இதனால் அந்த சிறுத்தைப்புலி கிராமப்பகுதியை ஒட்டியுள்ள வனத்துக்குள் ஓடிவிட்டது. இந்தநிலையில் மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த தொட்டநஞ்சா (வயது 55) என்ற விவசாயி தன்னுடைய 4 பசுமாடுகளை அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது வனப்பகுதிக்கு சென்ற சிறுத்தைப்புலி மீண்டும் கிராமப்பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த தொட்டநஞ்சாவின் பசுமாடு ஒன்றினை கடித்துக்கொன்றது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டது. இதற்கிடையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாடுகளை பார்க்க நேற்று மதியம் தொட்டநஞ்சா அங்கு வந்தார். அப்போது ஒரு பசுமாடு கழுத்தில் கடிபட்டு இறந்த நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தாளவாடி வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த பசுமாட்டின் உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த கால்தடங்களையும் ஆய்வு செய்தனர்.

மேலும் அந்த சிறுத்தைப்புலி கிராமப்பகுதியில் புகுந்து உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் அடிக்கடி சிறுத்தைப்புலி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஆடு, மாடுகள், நாய்களை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று உள்ளது. இதனால் நாங்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறோம். தற்போது அந்த சிறுத்தைப்புலி கிராமப்பகுதிக்குள்தான் சுற்றித்திரிகிறது. எனவே வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும், பசுமாட்டை இழந்த விவசாயிக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.



Next Story