குன்னத்தூரில் ஜவுளிக்கடையில் தீ விபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


குன்னத்தூரில் ஜவுளிக்கடையில் தீ விபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:29 PM GMT (Updated: 21 Nov 2018 10:29 PM GMT)

குன்னத்தூரில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமானது.

குன்னத்தூர்,

குன்னத்தூரில் ஊத்துக்குளி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பாசிங் (வயது 30) என்பவர் கடந்த 2 வருடங்களாக ஆஷா பூரா சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடையில் காலையிலும், மாலையிலும் சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவது வழக்கம். நேற்றுமாலை ஏற்றிய விளக்கை அணைக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் சம்பாசிங் ஜவுளிக்கடைக்குள் இருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் உடனடியாக ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பார்த்தபோது ஜவுளிக்கடையில் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்த வீட்டில் இருந்து தண்ணீரை குடம் குடமாக கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி போலீசார் உதவியுடன் அருகில் உள்ள தண்ணீர் லாரிக்கு தகவல் தெரிவித்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த னர்.

மேலும் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story