தாதரில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடியவர் கைது பயணிகள் விரட்டி பிடித்தனர்


தாதரில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடியவர் கைது பயணிகள் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-22T04:34:49+05:30)

தாதரில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடியவரை பயணிகள் விரட்டி பிடித்தனர். ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.

மும்பை, 

தாதரில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடியவரை பயணிகள் விரட்டி பிடித்தனர். ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.

பணம் திருட்டு

தானேயில் இருந்து சம்பவத்தன்று சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில், தகு தோதம் (வயது44) என்பவர் வாசற்படியில் நின்று பயணம் செய்தார். அந்த ரெயில் தாதர் நிலையத்திற்குள் மெதுவாக வந்தபோது, பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென தகு தோதம் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை திருடிவிட்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தகு தோதம் அந்த நபரின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். அப்போது அவரை தள்ளிவிட்டு அந்த நபர் தப்பிஓடினார்.

இதில் தகு தோதம் பிளாட்பாரத்தில் விழுந்து காயம் அடைந்தார். இதை பார்த்த பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் பணத்தை திருடிவிட்டு ஓடிய நபரை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் காயம் அடைந்தார்.

கைது

தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான நபர் மான்கூர்டு பகுதியை சேர்ந்த இப்ராகிம் ஷேக்(42) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தகு தோதமின் பணத்தை மீட்டு அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட இப்ராகிம் ஷேக் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 31 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story