கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு: மழைநீர் தேங்கிய சுரங்கப்பாதையை சப்-கலெக்டர் ஆய்வு - நடவடிக்கை எடுப்பதாக உறுதி
சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்த நிலையில், நேற்று அந்த பகுதிக்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் நேரில் சென்று ஆய்வு செய்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ளது செம்பளாக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையானதாக மாறிவிட்டது.
இதனால், செம்பளாக்குறிச்சி சித்தரிக்குப்பம், கவணை, பண்டாரங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், மாற்று பாதையில் சுற்றி தான் தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. சுரங்கபாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கோரி, பல முறை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சுரங்கப்பாதை முழுவதும் நீச்சல் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை கண்டித்து, வழக்கம் போல் இந்த மழைக்காலத்திலும் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தான் வருகிறார்கள். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதையடுத்து தங்களது போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்று தீவிரப்படுத்தும் விதமாக, பயனில்லாத இந்த சுரங்கப்பாதையை இழுத்து மூட வேண்டும், இல்லையெனில் தங்களுக்கு ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள்(சனிக்கிழமை) ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக செம்பளாக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அறிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் நேற்று பிரச்சினைக்குரிய அந்த ரெயில்வே சுரங்கப்பாதையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கி நிற்கும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, மாற்று பாதை அமைப்பதற்கான வழிகள் குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சப்-கலெக்டர் பிரசாந்த் உறுதியளித்தார். ஆய்வின் போது, அவருடன் தாசில்தார் கவியரசு, துணை தாசில்தார் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story