புயல் பாதிப்பால் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்: மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்
புயல் பாதிப்பால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருச்சி,
டெல்டா மாவட்டங்களில் ‘கஜா’ புயல் இவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை 70 வாகனங்களில் எடுத்து செல்கிறோம். தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தயாராக இருக்கிறேன்.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடுவதற்கும், நிவாரண உதவிகளை வழங்கவும் செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளை மக்கள் விரட்டியடிப்பது, வாகனங்களை தீ வைத்து எரிப்பதை பார்க்கும்போது அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ளனர் என்பது தெரிகிறது. மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். ‘கஜா’ புயலினை தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்படி, எல்–3 பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்–அமைச்சர், பிரதமரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். புயலால் சேதமான மரங்களுக்கு ரூ.600 என்றும், அவற்றை வெட்டி அகற்றிட ரூ.500 என்றும் ஆக ஒரு மரத்துக்கு சொற்ப தொகையாக ரூ.1,100 ஒதுக்கி உள்ளதை அதிகப்படுத்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி என்பதை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அதே வேளையில் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குடிசைவாசிகள். இது வேதனையாக இருக்கிறது. ஐ.நா. அமைப்பில் இருந்து ஏற்கனவே உலகம் முழுவதற்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருந்தனர். உலக வெப்பமயமாதலில் ஒரு டிகிரி உயர்ந்தால்கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தி இருந்தனர். இனியும் கஜா புயல்போன்று பேரழிவுகள் வரலாம். அது பேரிடியாக இருக்கும்.
அதில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதித்து 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசு குழு ஆய்வு செய்ய வரவில்லை. சாய்ந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்கள் வருமாறு:–
அவர் நன்றாக பேசுவார்கேள்வி: புயல் நிவாரணமாக நடிகர் சங்கம் மற்றும் நடிகர்–நடிகைகள் ஒன்றும் உதவ வில்லையே?
பதில்: நடிகர்கள் உதவி வருகிறார்கள். நடிகர் சங்கமும் செய்யும்.
கேள்வி: புயல் பாதித்த பகுதிகளுக்கு நடிகர்கள் உதவ முன்வராதது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, நடிப்பது அவர்கள் தொழில். நடப்பது அரசியல் என்று பதில் அளித்துள்ளாரே?
பதில்: அவர் நன்றாக பேசுவார்.
கேள்வி: நிவாரண பணிகளை படிப்படியாகத்தான் செய்யமுடியும்? என்று முதல்–அமைச்சர் கூறி இருப்பது குறித்து?
பதில்: நிவாரண பணிகளை தேவைப்படும் நேரத்தில் உடனடியாக செய்ய வேண்டும். நிவாரண பணிகளில் தேவைப்பட்டால் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.