மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டதால் கைவரிசை


மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டதால் கைவரிசை
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 6:52 PM GMT)

மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டதால் நகை பறித்ததாக கைதான பெண் தெரிவித்தார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பொம்மிஅம்மாள் (வயது 75). சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த பொம்மிஅம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்மநபர், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி பொம்மி அம்மாளுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் தனலட்சுமி (40) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான், பொம்மிஅம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்ததாக ஒப்புக்கொண்டார். தனலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- பொம்மிஅம்மாள் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வழியாக நடந்து சென்றவர்களை பிடித்து விசாரித்தோம். சந்தேகத்தின்பேரில் அந்த பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தோம். ஆனால் அதில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இதனால் பொம்மி அம்மாள் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தனலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தோம். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

குடும்ப வறுமையில் வாடும் அவர், கல்லூரியில் படித்து வரும் தனது பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்தார். சில நாட்களில் பணத்தை செலுத்திவிடுவதாக கல்லூரியில் எழுதி கொடுத்து உள்ளார். ஆனால் போதிய பணம் இல்லாததால் வீட்டின் உரிமையாளர் பொம்மி அம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியை பறித்து, அதை விற்று கல்லூரி கட்டணம் செலுத்த முடிவு செய்தார்.

அவருக்கு பார்வை சரியாக தெரியாததால் அதை பயன்படுத்தி, நைசாக அவரது வீட்டுக்குள் புகுந்து, பொம்மி அம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்று உள்ளது தனலட்சுமியிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதான தனலட்சுமியிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story