கஜா புயல் தாக்கிய வேதாரண்யம் பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிப்பு; 1 லட்சம் டன் உப்பு சேதம்


கஜா புயல் தாக்கிய வேதாரண்யம் பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிப்பு; 1 லட்சம் டன் உப்பு சேதம்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் டன் உப்பு சேதமடைந்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வேதாரண்யம்,

இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்திலும், அதற்கடுத்தபடியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. 700-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆண்டுக்கு 11 மாதம் உப்பு உற்பத்தி செய்யப்படும். தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் 10 மாதங்கள் உப்பு உற்பத்தி செய்யப்படும். ஆனால் வேதாரண்யத்தில் பருவநிலை காரணமாக ஆறு மாதங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.

இந்த ஆறு மாதங்களில் மட்டும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்ட புயல் காரணமாக உப்பு உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்து சேறும், சகதியுமாக ஆகி சேதமடைந்துள்ளன. மேலும் மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு சேதமடைந்துள்ளன.

இதனால் வருங்காலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அந்த நிலை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவினர் இடங்களை பார்வையிட்டு உற்பத்தியாளர்களுக்கு சுனாமி காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணத்தை விட அதிகமாக வழங்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர் கள் கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வேதாரண்யத்தை சேர்ந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பேரனும், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவருமான கயிலை மணி வேதரத்தினத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கஜா புயலின் தாக்கத்தினால் வேதாரண்யம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் கடல் நீர் புகுந்ததால் சேறும், சகதியுமாகி சேதமடைந்துள்ளன. உற்பத்தியாளர்களுக்கு உகந்த காலம் கோடை காலம். ஆனால் சுனாமியை விட தற்போது அடித்த கஜா புயலால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உப்பளங்கள் மட்டுமல்லாது உப்பு பாத்திகள் தொழி, தெப்பம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன மேலும் உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் டன் உப்பும் சேதமடைந்துள்ளன.

உப்பளங்களுக்கு செல்வதற்காக உப்பு இலாகா சார்பில் அமைக்கப்பட்ட மூன்று பிரதான சாலைகள் தவிர மற்ற அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு சலுகைகள் இல்லை.

மின்சாரம் மூலம் நீர் பாய்ச்சி உப்பு உற்பத்தி செய்வதைக் காட்டிலும் டீசல் மோட்டார் மூலம் நீரை பாய்ச்சி உற்பத்தி செய்வதால் 10 மடங்கு அதிக செலவாகும். மேலும் உப்பளங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போய்விட்டன. அங்கு இருந்த மோட்டார்களும் சேதமடைந்துள்ளன. அந்த பகுதியில் இருந்த மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.

தற்போது சேதமடைந்த ரோட்டை சீரமைக்க ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் தேவைப்படும் மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே சுனாமி காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணத்தை விட கூடுதலாக நிவாரணம் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

தமிழக அரசும் உற்பத்தியாளர்களுக்கான நிலத்தீர்வை மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். உப்பு இலாகா அதிகாரிகள் உடனடியாக வந்து பார்த்து ஆய்வு செய்து உப்பு உற்பத்தியாளர்களுக்கு தேவையான இழப்பீட்டை பெற முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் உப்பு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியும்.

விரைந்து இழப்பீடு வழங்கினால் கிணறுகள் அமைத்து உப்பளங்களில் படிந்த சகதிகளை அகற்றி ஜனவரி மாதத்தில் எங்களால் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்க முடியும். வழக்கமாக உப்பு மூன்று நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் உற்பத்தி செய்யப்படும். மழை வந்தால் ஒரு வாரம் மேலும் தாமதமாகும். வேதாரண்யம் பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 6 லட்சம் டன் உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story