நாமக்கல்லில் இருந்து ரூ.7 லட்சம் நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்
நாமக்கல்லில் இருந்து நேற்று 2-ம் கட்டமாக ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கலெக்டர் ஆசியா மரியம் அனுப்பி வைத்தார்.
நாமக்கல்,
‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 4 லாரிகளில் ரூ.11 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள் புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லாரியை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதில் 20 மூட்டை அரிசி, 30 மூட்டை சர்க்கரை, 5 மூட்டை கோதுமை மாவு, 15 மூட்டை ரவை, 55 டின் சமையல் எண்ணெய், 45 மூட்டை துவரம் பருப்பு, 2 மூட்டை பாசிபயிறு, 3 மூட்டை புளி, 8 மூட்டை சிவப்பு மிளகாய், பிஸ்கட் 40 பெட்டிகள் உள்பட ரூ.7 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 14 துப்புரவு பணியாளர்கள், 6 மரம் வெட்டுபவர்கள் கொண்ட குழுவினரும் உடன் சென்றனர்.
மேலும் தற்போது வரை ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாமக்கல்லில் இருந்து 30 ஜெனரேட்டர்கள், 13 எந்திர ரம்பங்கள், 5 தண்ணீர் லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உதவி பொறியாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், மரம் வெட்டுபவர்கள், மின்வாரிய பணியாளர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸிலி ராஜ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story