மத விவகாரங்களில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி


மத விவகாரங்களில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 7:18 PM GMT)

மத விவகாரங்களில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது என முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

நாமக்கல், 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகமது அபுபக்கர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு கடந்த 4½ ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புபணம் ஒழிக்கப்படும், நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்றனர். ஆனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஊழல் அற்ற ஆட்சி என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். ஆனால் ரபேல் ஊழல் பற்றி வாய் திறக்காமல் உள்ளனர்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பன்முகத்தன்மை. ஆனால் பா.ஜனதா மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறது. வருகிற 25-ந்தேதி அயோத்தியில் பள்ளிவாசல் இடித்த இடத்தில் ராமர்கோவிலை கட்டப்போவதாக ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் கூறிவருகின்றனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினையை அடாவடித்தனமாக தீர்க்கவேண்டும் என நினைத்தால் மிகப்பெரிய ஆபத்தை இந்தியா சந்திக்கவேண்டி இருக்கும். எனவே இப்பிரச்சினையை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியும் அமைய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுரையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அதற்காகத்தான் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம்.

‘கஜா’ புயலுக்கு முன்பு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டும் வகையில் இருந்தது. ஆனால் புயல் வந்த பின்னர் தமிழக அரசின் நடவடிக்கை மிகவும் மந்தநிலையில் உள்ளது. நிவாரணம் அறிவிக்கப்பட்டதோடு உள்ளது. அது மக்களை சென்றடையவில்லை. இன்னும் காலதாமதம் செய்தால் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும். எனவே போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்யவேண்டும்.

இந்தியாவில் இரண்டே அணிகள்தான் உள்ளன. 3-வது அணி என்பது எடுபடாது. சபரிமலை விஷயத்தை பொறுத்தவரை மத விவகாரங்களில் அரசாங்கமோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது. மத பிரச்சினையை அவரவர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். நிர்ப்பந்தித்து சட்டத்தின் மூலம், மத சம்பிரதாயங்களில் ஈடுபடுவது மதநல்லிணக்கத்தை கெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story