லோயர்கேம்ப் பகுதியில்: மதுரை குடிநீர் திட்டப்பணிக்காக அதிகாரிகள் ரகசிய ஆய்வு - விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு


லோயர்கேம்ப் பகுதியில்: மதுரை குடிநீர் திட்டப்பணிக்காக அதிகாரிகள் ரகசிய ஆய்வு - விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 9:30 PM GMT (Updated: 22 Nov 2018 7:31 PM GMT)

லோயர்கேம்ப் பகுதியில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல தடுப்பணை அமைக்க உள்ள இடத்தை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் குழுவினர் ரகசியமாக ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர், 

முல்லைப்பெரியாற்றின் தலைமதகான லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால் கோடைகாலங்களில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து குறைந்த அளவே திறந்துவிடப்படும் தண்ணீர், கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு வந்து சேராது. எனவே இதற்கு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை செய்ய அதிகாரிகள் வந்தபோது, இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமிபூஜை செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து இங்கு அதிகாரிகளின் வருகை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் லோயர்கேம்ப் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தடுப்பணை அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பென்னிகுவிக் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் பாலகிருஷ்ணன், சிலம்பரசன், மனோஜ்ராஜ் உள்பட விவசாயிகள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் காரில் திரும்பினர். அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட வந்தோம் என்று அவர்கள் கூறி சென்றனர். மதுரை குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகள் திடீரென ரகசியமாக வந்து ஆய்வு செய்வதும், முறையான பதில் கூறாமல் செல்வதும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story