கடன் தொல்லையால் வட்டார கல்வி அதிகாரி தற்கொலை


கடன் தொல்லையால் வட்டார கல்வி அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 7:34 PM GMT)

திண்டுக்கல் அருகே கடன் தொல்லை காரணமாக வட்டார கல்வி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல், 


திண்டுக்கல்லை அடுத்த வாழக்காய்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் வேடசந்தூர் வட்டார கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் பிரபாகரன் வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிரபாகரனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனையில் பிரபாகரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஜெயக் குமாரி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபாகரன் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்தார். அதேநேரம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கினர்.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story