திருப்போரூர் அருகே மழையால் சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு சீரமைக்க கலெக்டர் உத்தரவு


திருப்போரூர் அருகே மழையால் சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு சீரமைக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே மழை காரணமாக சாலை சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை உடனடியாக சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே மானாம்பதி அடுத்த ஆமையாம்பட்டு கிராமத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் 12 தூண்கள் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு மாற்றாக அதன் அருகே தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.

திருப்போரூர் பகுதியில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தற்காலிக மண் சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால், திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- ஆமையாம்பட்டு மேம்பாலப்பணி கடந்த 7 மாதங்களாக நடந்து வருகிறது. பொதுப்பணித்துறையினர் மெத்தனமாக இருந்ததாலும், இடையில் பணியை நிறுத்தி வைத்ததாலும் மேம்பாலப்பணி தாமதமாகிறது. தற்காலிக மண் சாலை 2 நாள் பெய்த மழைக்கே சேதம் அடைந்து விட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை தொடர்ந்து நீடித்தால், அருகில் உள்ள ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற வாய்ப்பு உள்ளது. அப்போது இதைவிட இருமடங்கு தண்ணீர் அதிகரித்து சுமார் 6 அடிக்குமேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால், திருக்கழுக்குன்றம் செல்ல நீண்ட தூரம் (40 கி.மீ.) சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இங்கு போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க தரமான சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இரவோடு இரவாக சாலையை சீரமைக்க அவர் உத்தரவிட்டார்.

அப்போது செங்கல்பட்டு உதவி கலெக்டர் முத்துவேல், திருப்போரூர் தாசில்தார் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story