பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் இரண்டு நாள் பயணமாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன் தினம் காலையில் நாகை வந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மாலையில் நாகையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திருவாரூர் வந்தார்.

திருவாரூர் பயணியர் மாளிகையில் அன்று இரவு தங்கிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று இரண்டாவது நாளாக திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வைட்டார். இதற்காக பயணியர் மாளிகையில் இருந்து காலை 9.45 மணி அளவில் கவர்னர், காரில் புறப்பட்டு சென்றார்.

திருவாரூரில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், காசாங்குளம், சேரி, கோட்டூர் சன்னதி தெரு, தாதன்திருவாசல், திருப்பத்தூர், குமாரமங்கலம், விளக்குடி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து மேட்டுப் பாளையம் என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை காரில் இருந்தபடியே கவர்னர் பார்வையிட்டு சென்றார். அப்போது அங்கு பாதிக் கப்பட்ட மக்கள் கவர்னரை சந்தித்து முறையிடுவதற்காக ரோட்டின் இருபுறமும் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் கவர்னரின் கார் அங்கு நிற்காமல், அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது.

இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். உடனடியாக கவர்னருடன் வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து சிறைபிடித்தனர். மேலும் அந்த பகுதியில் சாய்ந்து கிடந்த மரங்களை ரோட்டின் குறுக்கே இழுத்து போட்டனர். இதனால் கவர்னர் மற்றும் அவரது பாதுகாப்புக்காக வந்த ஒரு சில வாகனங்கள் மட்டும் அந்த இடத்தை கடந்து சென்றது.

கவர்னருடன் வந்த மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு ஆகியோரது வாகனங்கள் மற்றும் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் பொதுமக்களின் போராட்டத்தால் சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து காரை விட்டு இறங்கிய மன்னார்குடி உதவி கலெக்டர் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் போட்டு இருந்த மரங்களை அகற்றியதுடன் போராட்டத்தையும் கைவிட்டனர்.

புயல் பாதுகாப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story