மின் வினியோகம் செய்யாததை கண்டித்து நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


மின் வினியோகம் செய்யாததை கண்டித்து நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

மின் வினியோகம் செய்யாததை கண்டித்து நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாரத்தில் கஜா புயலால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கஜா புயலால் கடந்த 8 நாட்களாக கீழ்வேளூர் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கி உள்ளன.

இந்த நிலையில் மின் வினியோகம் செய்யாததை கண்டித்தும், உடனே மின்வினியோகம் வழங்கக்கோரியும் கீழ்வேளூரை அடுத்த சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மதியம் கீழ்வேளூர்-திருவாரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொண்டு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல், கூத்தூர், குருக்கத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு மின்வினியோகம் செய்யக்கோரி கூத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் மண்டல அலுவலர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் நாகை-தஞ்சை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் கீழ்வேளூரை அடுத்த சாட்டியக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசின் இலவச மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து சாட்டியக்குடி மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நாகூர் பட்டினச்சேரியில் கஜா புயலால் கடந்த 8 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மீனவ கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பட்டினச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் உடனே மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், புயலால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உடனே சீரமைக்க வலியுறுத்தியும், நாகூர் உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் நாகை தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை-காரைக்கால் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலவாஞ்சூர் சேவாபாரதி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் வராததை கண்டித்தும் வாஞ்சூர் ரவுண்டானாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் மணிவண்ணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தனர். தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் காரைக்கால்-நாகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story