பெங்களூருவில் புதிய வாகனங்கள் பதிவு செய்ய தடை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்


பெங்களூருவில் புதிய வாகனங்கள் பதிவு செய்ய தடை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2018 9:50 PM GMT (Updated: 22 Nov 2018 9:50 PM GMT)

பெங்களூருவில் புதிய வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் புதிய வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

அடிப்படை வசதிகளுக்கு...

‘டிசைன் பெங்களூரு’ என்ற அமைப்பு சார்பில் பெங்களூரு நகர வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவின் மக்கள் ெதாகை 30 லட்சம் ஆகும். இன்று அது ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் நகரில் அடிப்படை வசதிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியில் தீர்வு

குப்பை, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியில் தீர்வுகாண ஆலோசித்து வருகிறேன். தனியார் நிறுவனங்களின் ஆலோசனை கேட்டுள்ளேன்.

இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணாவிட்டால், பிரச்சினை மேலும் தீவிரம் அடைந்துவிடும். டெல்லியில் காற்று மாசு மிதமிஞ்சி சென்றுவிட்டதால், அங்கு தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது.

பதிவு செய்ய தடை

பெங்களூருவிலும் இத்தகைய முடிவை எடுத்தால், மக்கள் அதை ஏற்பது கடினம். அதனால் காற்று மாசு ஏற்படாமல் இருக்க அனைவரும் சுற்றுச்்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியம். காற்றுமாசு ஏற்படுவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நோக்கத்தில் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு புதிய வாகனங்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்படும். இதுபற்றி விரைவாக முடிவு அறிவிக்கப்படும். இதனால் காற்று மாசு அடைவது குறையும். போக்குவரத்து நெரிசலும் சற்று கட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினர்.

Next Story