நெய்வேலி பகுதியில் கனமழை: என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்


நெய்வேலி பகுதியில் கனமழை: என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 22 Nov 2018 10:57 PM GMT (Updated: 22 Nov 2018 10:57 PM GMT)

நெய்வேலி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மழை காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் பாதிப்பு எதும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு முதலாவது சுரங்கம், சுரங்கம் 1ஏ மற்றும் 2-வது சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மின்சாரம் தயாரிப்பதற்காக என்.எல்.சி. அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

வழக்கமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வெளியேற்றப்படும் உபரிநீர் ராட்சத குழாய்கள் மூலம் அந்தந்த சுரங்கங்களில் இருந்து கால்வாய், ஓடைகள் வழியாக ஏரிக்கு வெளியேற்றப்படும்.

இந்த நிலையில் கஜா புயலை தொடர்ந்து நெய்வேலி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக கனத்த மழை பெய்தது. இதன் காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் சுரங்க நீருடன், மழைநீரும் கலந்ததால் அந்த உபரிநீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுரங்கங்களில் இருந்து கூடுதலாக உபரிநீர் ராட்சத குழாய்கள் மூலம் நேற்று வெளியேற்றப்பட்டது.

அந்த வகையில் முதல் சுரங்கத்தில் இருந்து உபரிநீர் ‘பி-பாயிண்ட்’ என்ற இடத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வாய்க்கால் வழியாக சாம்பல் ஏரியில் வெளியேற்றப்படுகிறது.

இதே போல் சுரங்கம் 1ஏ-வில் இருந்து உபரிநீர் வேலுடையான்பட்டு கோவில் அருகே உள்ள ராட்சத குழாய்கள் மூலம் அங்குள்ள ஓடையில் வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து கண்ணுத்தோப்பு பாலம் வழியாக பெருமாள் ஏரியை அந்த நீர் சென்றடைகிறது. 2-வது சுரங்கத்தில் இருந்து உபரிநீர் பெரியாக்குறிச்சி ஓடை வழியாக வாலாஜா ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து என்.எல்.சி. அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தொடர்ந்து நெய்வேலியில் மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சுரங்கங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த மழையின் காரணமாக சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியிலோ அல்லது அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும் பணியிலோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.


Next Story