பெண்கள் மட்டுமே பணியாற்ற வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகள்: கணக்கெடுப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
பெண்கள் மட்டுமே பணியாற்ற வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்,
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுபோட வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பெரும்பாலான தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர் களே அதிகமாக உள்ளனர்.
எனவே, பெண்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு வரும் வகையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பெண் வாக்காளர்கள் இயல்பாக வந்து ஓட்டுபோடும் வகையில் வாக்குச்சாவடிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஆண்கள், பெண்கள் வாக்குச்சாவடிகள் என தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
மேலும், பெண்கள் வாக்குச்சாவடியில் அலுவலர்கள், முகவர்கள், போலீசார் என அனைவரையும் பெண்களாகவே நியமிக்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது. இதன்மூலம் பெண் வாக்காளர்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடி, முழுவதும் பெண்கள் மயமாகி விடும். இதனால் பெண் வாக்காளர்கள் இயல்பாகவும், ஆர்வமாகவும் வந்து ஓட்டுபோடுவார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையாக உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பெண்கள் மட்டுமே பணியாற்ற வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரத்து 396 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 8 லட்சத்து 60 ஆயிரத்து 897 பேரும், பெண்கள் 8 லட்சத்து 92 ஆயிரத்து 355 பேரும், இதர வாக்காளர்கள் 144 பேரும் உள்ளனர். மேலும் ஆண்களை விட 31 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் 278, நிலக்கோட்டையில் 265, பழனியில் 329, வேடசந்தூரில் 307, நத்தத்தில் 320, ஒட்டன்சத்திரத்தில் 288, ஆத்தூரில் 327 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் முழுக்க, முழுக்க பெண்களே பணியாற்ற வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகள் எவை? என்பது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முழுவதும் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story