கோவை மாவட்டத்தில்: 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்கும் திட்டம் - காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்


கோவை மாவட்டத்தில்: 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்கும் திட்டம் - காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 11:13 PM GMT)

கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வினியோகம் செய்யும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

கோவை, 

நாடு முழுவதும் 129 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் 63 இடங்களில் குழாய் மூலம் கியாஸ் வினியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவை கொடிசியாவில் இதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாகராஜன் எம்.பி., பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினை தான் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும். இதை சரி செய்ய இயற்கை எரிவாயுக்கு மாறியாக வேண்டும். காற்றில் இருக்கும் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பல்வேறு நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது போல் தமிழகத்தில் கோவை உள்பட பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் கோவை மாவட்டம் சிங்கப்பூராக மாறும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் செந்தில்குமார் பேசியதாவது:-

இந்தியன் ஆயில் நிறுவனம் நமது நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் 60 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்காலத்துக்கு ஏற்ப பசுமை மற்றும் மலிவான எரிபொருள் தேவை மற்றும் சமூக பொருளாதார அம்சங்களை கருத்தில் கொண்டு இயற்கை எரிவாயு துறையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகளுக்கும், 273 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.1,500 கோடி செலவிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிகரன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story