பல்லடம் அருகே: பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயம் - போக்குவரத்து பாதிப்பு


பல்லடம் அருகே: பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயம் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 11:37 PM GMT)

பல்லடம் அருகே பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல்லடம், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தில் கிறிஸ்டி அப்பேரல் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பனியன் நிறுவன தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருவதற்கு நிறுவனத்தின் சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்லடம்-உடுமலை ரோட்டில் பூளவாடி பகுதியில் நேற்று இரவு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பஸ் தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக நேற்று காலை 6.30 மணி அளவில் புறப்பட்டது. பஸ்சை கதிரேசன் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

மருதூரில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தாராபுரம் ரோடு வழியாக வந்து கள்ளிபாளையம், துத்தேரிபாளையம், கள்ள கிணறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களையும் ஏற்றிக்கொண்டு பனியன் நிறுவனத்தை நோக்கி அந்த பஸ் வந்துகொண்டிருந்தது. இதில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் லேசான மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் பனியன் நிறுவன பஸ் பல்லடம்-திருப்பூர் சாலையில் உள்ள குங்குமபாளையம் அருகே காலை 8.30 மணி அளவில் வந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் மோட்டார்சைக்கிளில் சென்றார். அவர் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் கதிரேசன் திடீரென்று பஸ்சை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார்.

ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்கம், பின் பக்க கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் அய்யோ, அம்மா என்று கூச்சல் போட்டனர்.

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தாரா புரம் ரோடு ஓலப்பாளையத்தை சேர்ந்த சத்தியபிரியா (19), கள்ளிபாளையத்தை சேர்ந்த சரண்யா (18), துத்தேரிபாளையத்தை சேர்ந்த ரதிதேவி (37), பரிமளா (28), எலவந்தி பகுதியை சேர்ந்த மேரி (45), வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரி (23) ஆகிய 6 பெண்களும், திருப்பூர் நந்தவனம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (46) மற்றும் மருதூரை சேர்ந்த மகேஷ் (20) என மொத்தம் 8 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயம் அடைந்த 6 பெண்கள் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், மற்ற 2 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போக்குவரத்தை சீர் செய்ததுடன் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் விபத்துக்குள்ளான பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

Next Story