புலியூர் அருகே கார் மோதி தாய்-மகள் பலி


புலியூர் அருகே கார் மோதி தாய்-மகள் பலி
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

புலியூர் அருகே கார் மோதிய விபத்தில் தாய், மகள் பலியானார்கள்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பனங்காட்டூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி அலமேலு (வயது 54). நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து தனது மகளுடன் புலியூரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார், முன்னே சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு மற்றும் அவரது மகள் வைஜெயந்தி (34) ஆகிய 2 பேர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 100 அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது கார் மோதி நின்றது. இதில் அலமேலு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

வைஜெயந்திக்கு இரண்டு கால்களும் முறிந்தன. அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்தநிலையில் போச்சம்பள்ளியில் கட்சிஆலோசனை கூட்டத்திற்கு அந்த வழியாக சென்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி விபத்தை அறிந்ததும் காரில் இருந்து இறங்கி வந்தார். விபத்தில் இறந்த பெண்ணின் உடலை மீட்டு அனுப்ப ஏற்பாடுசெய்ய போலீசாரிடம் கேட்டுகொண்டார். மேலும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற பெண்ணிற்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய கட்சியினரிடம் ஆலோசனை கூறினார்.

இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story