கள்ளக்காதலி சந்திக்க மறுத்ததால் விரக்தி: கிணற்றில் குதித்து பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை


கள்ளக்காதலி சந்திக்க மறுத்ததால் விரக்தி: கிணற்றில் குதித்து பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2018 4:45 AM IST (Updated: 24 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கள்ளக்காதலி சந்திக்க மறுத்ததால் விரக்தியடைந்த பனியன் நிறுவன தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காங்கேயம்,

காங்கேயத்தை அடுத்து உள்ள குருக்கபாளையம் கிராமம் ஆண்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 30). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊரில் உள்ள பொது கிணற்றில் பிரகாஷ் பிணமாக மிதப்பதாக ஊதியூர் போலீசாருக்கும், காங்கேயம் தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மதுரை வீரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 50 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் இருந்து பிரகாஷ் உடலை மீட்டனர். பின்னர் ஊதியூர் போலீசார், பிரகாஷ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பிரகாஷ் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது தன்னுடன் வேலை பார்த்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை பிரகாஷ் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணும் அடிக்கடி பிரகாஷ் வீட்டுக்கு வந்து தங்கி சென்று உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண் பிரகாசை சந்திப்பதை தவிர்த்து விட்டார். தன்னை விட்டு காதலி பிரிந்து சென்று விட்டாளே என்று விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊரில் உள்ள இந்த பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story