திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்; அதிகரிக்கும் உயிர்பலிகள்
திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100–ஐ தாண்டி விடுகிறது.
திருப்பூர் ,
பன்றிக்காய்ச்சல். இந்த வார்த்தையை கேட்டாலே திருப்பூர் மாவட்ட மக்கள் பீதியடைந்து விடுகிறார்கள். ஆம். கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தாலும், அதில் அதிக இடம் பிடித்திருப்பவர்களும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக திருப்பூர் இருப்பதாலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் திருப்பூருக்கு வந்து செல்பவர்களாலும் இந்த காய்ச்சல் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100–ஐ தாண்டி விடுகிறது. இவர்களில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு காணப்பட்டால் அவர்களை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகிறார்கள். காய்ச்சலுக்கு இறப்புகள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இல்லை என்று கூறினாலும் பன்றி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் திருப்பூரில் அதிகரித்த வண்ணமே இருக்கிறார்கள். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு 69 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்றிக்காய்ச்சல் எச்1 என்1 என்ற வைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோய். காற்றின் மூலமாகவே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. நோய் தாக்கம் பெற்றவர்கள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சளி, தும்மல், இருமல், தொடர் காய்ச்சல், தொண்டை வலியோடு பன்றிக்காய்ச்சல் அறிகுறி தொடங்குகிறது. 2 முதல் 4 நாட்களாக இவ்வாறு இருந்தால் அவர்கள் கண்டிப்பாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது.
ஆனால் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்களோ காய்ச்சலுக்கு மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு பணியாற்ற சென்று விடுகிறார்கள். காய்ச்சல் உச்ச கட்டத்தை அடைந்து உடல் வலி அதிகரித்து பெரும் பாதிப்புக்கு ஆளாகும்போது தான் டாக்டரை அணுகுகிறார்கள். அபாய கட்டத்தை நெருங்கும்போது கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பின்னர் உயிரிழப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பன்றிக்காய்ச்சல் அதிகரிக்கும்போது நுரையீரல் செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நுரையீரல் தொடர்பான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களிடம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட சுகாதார பணிகள் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி இறந்த பிறகு தான், சம்பந்தப்பட்ட பகுதியில் சுகாதார பணிகளை அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். சிறப்பு மருத்துவ முகாமை அந்த பகுதியில் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் அந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் சுணக்க நிலையே ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காசநோய் பிரிவு முன்னாள் துணை இயக்குனர்(பொறுப்பு) டாக்டர் பொம்முசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
பன்றிக்காய்ச்சலில் 3 நிலைகள் உள்ளன. அதாவது ‘ஏ‘ நிலை, ‘பி’ நிலை, ‘சி’ நிலை. ‘ஏ’ நிலையை பொறுத்தவரை காய்ச்சல், சளி 2 நாட்கள் காணப்படும். இவர்கள் டேமி புளு மாத்திரைகள் சாப்பிட வேண்டியது இல்லை. டாக்டரிடம் ஆலோசனையின் பேரில் வழக்கமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘பி’ நிலையானது சளி, காய்ச்சலுடன் தொண்டை வலி இருக்கும். இருமல் அதிகமாக இருக்கும். 4 நாட்கள் இவ்வாறு தொடர்ந்தால் அவர்கள் டாக்டரை சந்தித்து ‘டேமி புளு’ மாத்திரைகள் சாப்பிட வேண்டும். 4 நாட்களுக்கும் மேலாக மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் ‘சி’ நிலையாகும்.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை சளியை சேகரித்து பரிசோதனைக்கு(பி.சி.ஆர்) கோவை, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். 18 மணி முதல் 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்து விடும். பன்றிக்காய்ச்சல் என்பது தெரிந்து விட்டால் அவர்களுக்கு ‘டேமி புளு’ மாத்திரைகள் கொடுப்பதுடன் ஊசியும் போட்டு டாக்டரின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நுரையீரலில் சளி அதிகமாகும்போது மூச்சுத்திணறல் ஏற்படும். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். அதிகப்படியான உடல்வலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை இருக்கும். தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும். முறையாக சிகிச்சை அளித்தால் பன்றிக்காய்ச்சலுக்கு யாரும் பயப்பட தேவையில்லை.
‘ஏ’ நிலை தாக்கம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால் நோய் தீவிரமாக தாக்குவதில் இருந்து அவர்கள் தப்பிக்கலாம். திருப்பூரை பொறுத்தவரை மக்கள் நெருக்கடி அதிகமாக இருப்பதால் இந்த காய்ச்சல் பரவுவதற்கான சூழல் சாதகமாக இருக்கிறது. பொதுவாக மழைக்கால சீதோஷ்ண நிலையில் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. வழக்கமாக ஜூன், ஆகஸ்டு மாதங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும். மே மாதம் அரசு சார்பில் புளு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதனால் வரும்முன் நோயை தவிர்க்கலாம்.
பன்றிக்காய்ச்சல் ஊசி மருந்து ரூ.900 முதல் ரூ.1,500–க்கு கிடைக்கிறது. அதுபோல் சளி பரிசோதனை செய்ய ஒருவருக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பன்றிக்காய்ச்சல் திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர்(பொறுப்பு) கோமதி கூறியதாவது:–
திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில், கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொதுவாக புளு வைரஸ் மூலமாக சளியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. 4 நாட்களுக்கு மேலாக உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு டேமி புளூ மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. திருப்பூர் பகுதியில் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு 3 நாட்களில் அவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும்போது சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு இறந்தவர்களுக்கு ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கும். அவர்கள் சிகிச்சை பெற்று காய்ச்சல் குறைந்ததும் சிகிச்சையை தொடராமல் இருந்து இருப்பார்கள். அவர்களின் உடலில் வைரஸ் அப்படியே தங்கியிருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மீண்டும் அவர்களுக்கு தீவிரமாக காய்ச்சல் ஏற்பட்டு 3 நாட்களுக்குள் அபாய கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பன்றிக்காய்ச்சல் வந்து விட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்ற நிலை இல்லை. ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டால் பயப்பட வேண்டியதில்லை.
கடந்த 2 வாரங்களில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 2 நாட்களாக குறைந்து இருக்கிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக இன்று(நேற்று) 90 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெளிநோயாளியாக 400 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சளி பரிசோதனை என்பது தேவையில்லாதது. நோயின் தீவிரத்தை பொறுத்தே சளி பரிசோதனை மேற்கொள்கிறோம். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களிடம் சளி பரிசோதனை செய்து ஆரம்பக்கட்ட அறிகுறி என்றாலும் கூட, பன்றிக்காய்ச்சல் அறிகுறி என்று கூறி சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இதனால் பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவுவது போன்று தோற்றம் ஏற்படுகிறது. பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீண்ட தூர பயணம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. முககவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வந்தால் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி தொற்று உள்ளவர்கள் இருமல், தும்மல் வரும்போது வாய், மூக்கை துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர், திருமண மண்டபங்கள், அரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் செய்யும்போது காற்றின் மூலமாக எளிதில் மற்றவர்களுக்கு பரவுகிறது. அதுபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ், ரெயில்களில் பயணம் செய்யும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களிடம் இருந்து காற்றின் மூலமாக பரவுகிறது. முடிந்தவரை குளிர்சாதன வசதி கொண்ட, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு சென்றாலும் ‘முககவசம்’(மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும்.
பன்றிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை எளிதில் தாக்குகிறது. 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், காசநோயால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், புகை பிடிப்பவர்களை எளிதில் தாக்குகிறது. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவர்கள் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.