கோடையில் சென்னை மக்களின் தாகம் தீர்க்க செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கோடையில் சென்னை மக்களின் தாகம் தீர்க்க செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோடையில் சென்னை மக்களின் தாகம் தீர்க்க தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புமா? என பொதுமக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. போதிய மழை இல்லாததால் தற்போது குறைந்த அளவு தண்ணீருடன் ஆங்காங்கே தரை தெரிந்தபடி காட்சி அளிக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம் கொண்டது. 3,645 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். மழைக்கு முன்பு ஏரியின் நீர்மட்டம் 4.21 அடியாகவும், நீர் இருப்பு 163 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 4.80 அடியாகவும், நீர் இருப்பு 206 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்து இருந்தது. ஏரிக்கு 179 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 41 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

2015-ம் ஆண்டு பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தாலே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி விட்டதா? என்று மக்கள் அச்சத்துடன் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் 2016, 2017-ம் ஆண்டுகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் போனதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயராமல் ஏமாற்றி விட்டது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழையிலாவது போதிய அளவு மழை பெய்து, கோடையில் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் அளவுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பொதுமக்கள் செல்லும் முக்கிய வழிகளில் உள்ள இரும்பு கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் எவ்வளவு உள்ளது எனவும், ஏரியின் அழகை ரசிக்க முடியாமலும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சிலர் தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தி விட்டு நீண்ட தூரம் நடந்து சென்று ஏரியை பார்வையிடுகின்றனர்.

இதனால் ஏரிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நடைபயிற்சியில் ஈடுபடும் முதியோர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். சிலர் ஏரியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால்தான் கதவுகளை பூட்டி வைத்து உள்ளார்களோ? என்ற அச்சத்திலும் சென்று விடுகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. மழை தொடர்ந்து நீடிக்குமானால் பல்வேறு ஏரிகள் நிரம்பி, அதன் உபரிநீரை திறந்து விடும்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயரும். நீர் இருப்பு அதிகரிக்கும். கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு சிரமம் இன்றி குடிநீர் வினியோகம் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால் மழை சரிவர பெய்யாமல் பொய்த்துப்போனால் ஏரியின் நீர் மட்டம் குறையும். கோடையில் சென்னை மக்களின் தாகம் தீர்பது கேள்விக்குறியாக மாறிவிடலாம். வழக்கம்போல் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி, தண்ணீர் சேமித்து வைக்கும் கொள்ளளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story