மின்சாரம், குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கந்தர்வகோட்டையில் பரபரப்பு


மின்சாரம், குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கந்தர்வகோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 5:00 AM IST (Updated: 24 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டையில் மின்சாரம், குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் செய்தார்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். நேற்று 2-வது நாளாக அவர் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். இதற்காக அவர் கந்தர்வகோட்டை பகுதிக்கு புதுக்கோட்டையில் இருந்து காரில் சென்றார்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை நகரில் உள்ள முல்லைநகர், முஸ்லிம் தெரு, பெரிய அரிசிக்கார தெரு, சின்ன அரிசிக்கார தெரு, பெரியகடை வீதி பகுதி, யாதவர் தெரு மற்றும் அக்கச்சிப்பட்டி கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர், மின்சாரம் வழங்க கோரி கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு செல்ல இருந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானமடையவில்லை. தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கார்களில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்தனர். பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்து இறங்கி, மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்தார்.

அவர் பொதுமக்களிடம், “குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், நிவாரண பொருட்களும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை சாலை வழியாக கறம்பக்குடி பகுதிக்கு சென்றார்.

அவருடன் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் மற்றும் ஆறுமுகம் எம்.எல்.ஏ. மற்றும் கந்தர்வகோட்டை கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் சென்றனர்.

Next Story