திண்டுக்கல்லில் வங்கி முன்பு நிறுத்தி இருந்த ஓட்டல் மேலாளர் ஸ்கூட்டரில் ரூ.1½ லட்சம் திருட்டு


திண்டுக்கல்லில் வங்கி முன்பு நிறுத்தி இருந்த ஓட்டல் மேலாளர் ஸ்கூட்டரில் ரூ.1½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 23 Nov 2018 9:45 PM GMT (Updated: 23 Nov 2018 9:15 PM GMT)

வங்கி முன்பு நிறுத்தி இருந்த ஓட்டல் மேலாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.1½ லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்,

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக இருப்பவர் மோகன். இவர் நேற்று தாடிக்கொம்பு சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க, ஸ்கூட்டரில் சென்றார். வங்கியில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். பின்னர் பாதுகாப்புக்காக பணத்தை ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் இருக்கும் பெட்டியில் வைத்து பூட்டினார்.

இதையடுத்து ஆர்.எம்.காலனியில் உள்ள ஒரு வங்கியில் காசோலையை மாற்றுவதற்கு சென்றார். அங்கு வங்கி முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி பூட்டினார். பின்னர் காசோலையை மாற்றுவதற்கு வங்கிக்குள் சென்று விட்டார். சுமார் 10 நிமிடங்கள் கழித்து வங்கியில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஸ்கூட்டர் இருக்கையின் கீழே இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் இருந்த ரூ.1½ லட்சத்தை காணவில்லை. மோகன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வங்கிக்குள் சென்றதை நோட்டமிட்ட, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோகனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் வங்கிக்குள் உள்ளே சென்று நோட்டம் பார்க்கிறார். மற்ற 2 பேரும் ஸ்கூட்டர் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை திருடுவது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story