பட்டுக்கோட்டையில்: 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கிய 200 கிராமங்கள் - கொட்டும் மழையால் நிவாரண பணிகள் பாதிப்பு


பட்டுக்கோட்டையில்: 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கிய 200 கிராமங்கள் - கொட்டும் மழையால் நிவாரண பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 10:07 PM GMT)

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

பட்டுக்கோட்டை,

கஜா புயல் சீற்றத்தில் சிக்கி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால் தென்னை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். மின்கம்பங்கள் சாய்ந்ததால் பட்டுக்கோட்டையில் கடந்த 15-ந் தேதி இரவு 8 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று வரை மின்வினியோகம் இல்லாததால் 9-வது நாளாக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டுக்கோட்டை நகரில் ஒரு சில தெருக்களுக்கு மட்டும் தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான தெருக்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. நகரிலும், கிராமப்புறங்களிலும் சாலைகளில் விழுந்து கிடக்கும் மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை. பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட கிராமங்களும் மின் இணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளன.

பட்டுக்கோட்டை நகரில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடிசை வீடுகளிலிருந்து மாடி வீடுகள் வரை பலத்த சேதம் அடைந்துள்ளன. ஓட்டு வீடுகளில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை தாலுகாவில் தம்பிக்கோட்டை வடகாடு, தம்பிக்கோட்டை மேலக்காடு, மறவக்காடு, மஞ்சவயல், கிருஷ்ணாபுரம், தாமரங்கோட்டை, வாட்டாக்குடி, துவரங்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளூர், அதிராம்பட்டினம், மகிழங்கோட்டை, சேண்டாக்கோட்டை, சூரப்பள்ளம், ஆத்திக்கோட்டை உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.

இது குறித்து தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் வி.பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தாலுகாவில் தான் அதிக அளவு தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் வரலாறு காணாத வகையில் வீசிய கஜா புயலில் தென்னை மரங்கள் அனைத்தும் சாய்ந்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை மீண்டும் பயிர்செய்து பலன் கிடைக்க வேண்டுமானால் 20 ஆண்டுகள் ஆகும். எனவே பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நெற்பயிற்கள் சாய்ந்து உள்ளன. பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது. பட்டுக்கோட்டையில் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், நரசிங்கபுரம், கீழதோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கி உள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால் நிவாரண முகாம் களில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்கள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் பகுதியில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளை இழந்த நிலையில் கோவில்கள் மற்றும் புயல் பாதுகாப்பு முகாம்களில் முடங்கி உள்ளனர்.


கஜா புயலில் சிக்கி ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் துண்டிகப்பட்டது. இதனால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு தாலுகா பகுதியில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றும், அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை எனக்கூறி ஒரத்தநாட்டை அடுத்துள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியல் போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story