மக்களுக்கு ஆதரவாக தலைவர்கள் இருக்க வேண்டும்: ‘புயல் பாதித்த இடங்கள் அரசியல் களமல்ல’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மக்களுக்கு ஆதரவாக தலைவர்கள் இருக்க வேண்டும்: ‘புயல் பாதித்த இடங்கள் அரசியல் களமல்ல’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 10:36 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அரசியல் செய்யும் களமல்ல. மக்களுக்கு ஆதரவாக தலைவர்கள் இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

செம்பட்டு,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் மருத்துவ உதவி செய்யப்பட உள்ளது. ரூ.15 லட்சம் செலவில் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. வேதாரண்யத்தில் ஒரு மீனவ கிராமத்தில் இருந்து மருத்துவ சேவையை தொடங்க உள்ளோம். ஒரு டாக்டர் என்ற முறையில் மருத்துவ சேவை செய்ய உள்ளேன்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருவதாக தகவல் உள்ளது. நிர்வாக ரீதியாக பேரிடர் மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.

புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது தொடர்பாக விமர்சித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை விட்டு மக்களுக்கான மனநிலையில் பேச வேண்டும். மக்களுக்கு ஆதரவாக எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இருக்க வேண்டும். யாருக்கும் அரசியல் செய்யும் களம், புயல் களமல்ல. மனிதாபிமான களமாக பார்க்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் புயலே வரவில்லையா? ‘தானே’ புயலுக்கு மத்திய அரசிடம் எவ்வளவு கேட்டார்கள்? மத்திய அரசு எவ்வளவு அளித்தது என்பதை அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். ரூ.5 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.100 கோடி தான் மத்திய அரசு அளித்தது. அப்போது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆக சும்மா கணக்கு வழக்குகளை பேசாமல் எல்லோரும் வேலை செய்ய வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரூ.3 கோடி அளவிலான நிவாரண பொருட்கள் டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புயல் பாதித்த பகுதிகளில் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து செயல்பட தயார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது பற்றிய கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், “புயல் பாதித்த பகுதிகளில் அனைத்து கட்சி தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட நாங்களும் தயார். மு.க.ஸ்டாலினும் எங்களுடன் வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்“ என்றார்.

Next Story