விபத்து நடந்த இடத்துக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய வாலிபர் கைது


விபத்து நடந்த இடத்துக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

விபத்து நடந்த இடத்துக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர்,

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலியர்வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் வினுச்சக்ரவர்த்தி (வயது 36). இவர், 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி இரவு பாப்பம்பட்டி பகுதியில் இருந்து சித்தநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் வினுச்சக்ரவர்த்தியும், ஓட்டுனர் கடல் ராஜ் என்பவரும் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு, விபத்தில் சிக்கிய 3 பேரையும் அவர்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அங்கு நின்றிருந்த பாப்பம்பட்டியை சேர்ந்த முத்துசிவசங்கர் (23) என்பவர் கடல்ராஜ் மற்றும் வினுச்சக்ரவர்த்தி ஆகியோரிடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர், கடல்ராஜ், வினுச்சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்துள்ளார்.

அப்போது, முத்து சிவசங்கர் குடிபோதையில் இருந்துள்ளார். இது குறித்து வினுச்சக்ரவர்த்தி சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து சிவசங்கரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அலுவலர்கள் கூறும் போது, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது என்ற நோக்கில் தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம் என்றனர்.

Next Story