வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் 4 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை ஆரணி அருகே பரிதாபம்


வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் 4 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை ஆரணி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதால் பீதியடைந்த 4 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆரணி, 

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். தறி தொழிலாளி. இவருக்கும் வேலூரில் உள்ள இவரது மாமா குமார் மகள் வித்யாவுக்கும் (வயது 20) கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது வித்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். அவர் வயிற்று வலியால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்தார்.

கர்ப்பிணியான பின் டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்றபோது ஏற்கனவே உனக்கு வயிற்று வலி அடிக்கடி வருகிறது. எனவே உனது குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம். அதனை தவிர்க்க தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர் கூறியதால் வித்யா பீதியடைந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீயில் கருகி அவர் அலறியதால் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தபின் வித்யாவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வித்யாவின் உடல்நிலை மேலும் மோசமானது. அவரிடம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யா இறந்து விட்டார். திருமணமாகி 2 வருடங்களில் அதுவும் கர்ப்பிணியாக இருந்தபோது தீக்குளித்து அவர் தற்கொலை செய்து கொண்டதால் அது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வழக்கு பதிவு செய்தார். அதன் மீது கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என டாக்டர் கூறியதால் பீதியடைந்த கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story