புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
குமாரபாளையம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு வதற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்களிடம் இருந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. ரூ.4 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணைய், துணிகள், நாப்கின்கள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் ஏற்றப்பபட்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரி வழியனுப்பும் நிகழ்ச்சி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி தலைமை தாங்கினார். குமாரபாளையம் நகராட்சி (பொறுப்பு) தனி அலுவலர் மகேஸ்வரி வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் ரேணுகா, ஓவர்சியர் சந்தோஷ் குமரேசன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ராசிபுரம் அருகேயுள்ள புதுப்பட்டி பகுதியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரித்தனர். மாணவ-மாணவிகள் மொத்தம் ரூ.4ஆயிரத்து 720 சேகரித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கினர்.
இந்த நிவாரண நிதி மற்றும் பொருட்களை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அளிக்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story