உழவர் சந்தைகளுக்கு வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் உழவர் சந்தைகளுக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் மற்றும் மோகனூர் உள்ளிட்ட இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று ரூ.20 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் மற்றும் பழவகைகள் விற்பனையானது.
இதில் 64 ஆயிரத்து 596 கிலோ காய்கறிகளும், 11 ஆயிரத்து 358 கிலோ பழ வகைகளும் விற்பனை செய்யப்பட்டது. 913 விவசாயிகள் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 17 ஆயிரத்து 399 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.
இதற்கிடையே பிற மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்தை விட குறைவாக உள்ளதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், கடந்த வாரம் ரூ.30-க்கும், நேற்று ரூ.33-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, நேற்று 2 ரூபாய் அதிகரித்து ரூ.17-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் வரத்து அதிகரிக்கும் வரை இதே நிலையே நீடிக்கும் என உழவர் சந்தை அலுவலர்கள் கூறினர்.
Related Tags :
Next Story