தாராபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற தொழிலாளி திடீர் சாவு


தாராபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 25 Nov 2018 4:45 AM IST (Updated: 25 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற தொழிலாளி திடீர் என இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (வயது 36) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுசிலா என்ற மனைவியும், சுமித்ரா (11), பவித்ரா (9), புவனா (7) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் மகுடீஸ்வரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அருகே உள்ள பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகுடீஸ்வரனை அங்கிருந்த ஊழியர்கள் பரிசோதனை செய்யாமல், அவர் கூறியதை வைத்து, அவருக்கு ஊசி போட்டதோடு, மாத்திரைகளை கொடுத்து அனுப்பினர். வீட்டிற்கு வந்த மகுடீஸ்வரன், சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மகுடீஸ்வரனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றதையும், அங்கு ஊழியர்கள் ஊசிபோட்டது மற்றும் அவர்கள் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டதும் மகுடீஸ்வரன் இறந்துபோனதையும் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் மகுடீஸ்வரனுக்கு அளித்த சிகிச்சை குறித்து விசாரித்துள்ளனர்.

அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சுகாதார நிலையத்தில் இருந்த ஆவணங்களில் மகுடீஸ்வரனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிகிறது. இதனால் மகுடீஸ்வரனின் குடும்பத்தினர்களும், உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். சுமார் 1 மணி நேரமாகியும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் யாரும் வந்து, விளக்கம் தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மகுடீஸ்வரனின் உறவினர்கள் நியாயம் கேட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு, தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் நியாயம் கிடைக்கும் வரை கலைந்துசெல்ல மாட்டோம் என்று கூறினர்.

இதனால் தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. அதன் பிறகு தாசில்தார் சிவக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தால், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மகுடீஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story