கல்லூரிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 25 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே கல்லூரிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய், வினோபா நகரைச்சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 45). மோட்டார் ரீவைண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள்(40). இவர்களுக்கு பிரேம்ஜித்(19) என்ற மகன் உள்ளார். இவர் நத்தக்காடையூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களாகவே பிரேம்ஜித் கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது பெற்றோர் கல்லூரிக்கு சென்று படிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்ஜித் மனவேதனையில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தங்கபாண்டியன் தனது நிறுவனத்திற்கு சென்று விட்டார். தாயாரும் வெளியே சென்றிருந்தார்.

பிரேம்ஜித் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் 2 மணிக்கு தங்கபாண்டியன் வீட்டிற்கு சாப்பிட வந்தபோது பிரேம்ஜித் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்குவதை கண்ட தங்கபாண்டியன் சத்தம்போட்டு அலறியுள்ளார்.உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேம்ஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story