பெண்ணாடத்தில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் விடிய, விடிய போராட்டம் வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்


பெண்ணாடத்தில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் விடிய, விடிய போராட்டம் வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 3 மாதமாக ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது.

பெண்ணாடம்.

இதுதொடர்பாக பலகட்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எனவே கடந்த 23-ந் தேதி ஊதியம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அன்று ஊதியம் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சர்க்கரை ஆலை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், 2017-18-ம் ஆண்டு போனஸ் மற்றும் சேமிப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷமிட்டனர். போராட்டம் நடத்தும் தொழிலாளர்களுடன் சர்க்கரை ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவு 12 மணியை கடந்தும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆலை வளாகத்திலேயே அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், இன்று(அதாவது நேற்று) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இங்கேயே அமர்ந்து விடிய, விடிய போராட்டம் நடத்துவோம். யாரும் வீட்டிற்கு செல்ல மாட்டோம். எங்களுக்கு தேவையான உணவை இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம். அடுத்த கட்டமாக 26-ந் தேதி(நாளை) திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் இறையூர் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Next Story