ராமேசுவரத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


ராமேசுவரத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ராமேசுவரம்,

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய தொடர்ந்து கனமழையாக கொட்டியது.

ராமேசுவரத்தில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றதால் மக்கள் அவதி அடைந்தனர்.

ராமேசுவரம் கோவிலின் 2–ம் பிரகாரம், அம்மன் சன்னதியையும் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெய்த கனமழையால் அப்துல்கலாம் மணிமண்டபம், ரெயில்வே சுரங்கப்பாதை ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்கியது.

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் தீவு பகுதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ராமேசுவரம் பகுதியில் 226 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம் கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்துக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இந்த இரு கிராமங்களை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே செம்மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 50–க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்துக்கு இந்த தரைப்பாலம் பயன்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், மழை நீர் வெள்ளாற்றில் பாய்ந்தோடியது. இதில் தரைப்பாலம் நேற்று அடித்து செல்லப்பட்டது. இதனால் 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.


Next Story