இணையதளம் முடங்கியது: மருத்துவ காப்பீட்டு அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு


இணையதளம் முடங்கியது: மருத்துவ காப்பீட்டு அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

இணையதளம் முடங்கியதால் தேனி மாவட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

கம்பம், 

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்துக்கு, ஆண்டிற்கு குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் காப்பீட்டு அட்டை பெறுவதற்கான அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 6 நாட்களாக மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்கும் இணையதளம் முடங்கியதால் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் மருத்துவ சேவை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்வதற்காக பலர் காப்பீட்டு அட்டை கிடைக்காமல் பணம் செலவழித்து சிகிச்சை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கம்பத்தில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான இணையதள மெயின்சர்வர் சென்னையில் உள்ளது. கடந்த 6 நாட்களாக இணையதள மெயின் சர்வர் முடங்கியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பீட்டு அட்டை வழங்க முடியாமல் உள்ளது. இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பழுது சரி செய்யப்பட்டு விரைவில் காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்றார்.

Next Story