கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு
தேனி அருகே கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தேனி,
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 42). இவர், அங்குள்ள ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் ரமேஷ் (21). இவர், தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
தேனியை அடுத்த பள்ளப்பட்டி சத்தியநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி முத்துமரியா வீட்டில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இவர் கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தற்கொலை செய்வதற்காக தனது பாட்டி வீட்டில் விஷம் குடித்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை சீனிவாசன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story