நாராயணசாமியின் தாயார் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை; ஜி.கே.வாசன், ப.சிதம்பரமும் நேரில் அஞ்சலி
முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் படத்துக்கு மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோர் நேரில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் (வயது 96). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22–ந் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு ஆறுதல் கூறினார்.
மு.க.ஸ்டாலினுடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
பின்னர் காலை 11.50 மணியளவில் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சேலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–
புதுச்சேரி மாநிலத்தினுடைய முதல்–மந்திரி நாராயணசாமியினுடைய தாயார் ஈஸ்வரி அம்மாள் மறைவு என்பது அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்திருக்கிறது. அவருடைய தாயார் மறைவெய்தியபோது நான் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் பயணத்தை மேற்கொண்டேன் என்ற காரணத்தால் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று நேரடியாக அவருடைய இல்லத்திற்கு வந்து உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய புதுவை முதல்–மந்திரிக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நேற்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு வந்து அவரது தாயார் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.