ஒடுகத்தூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை முயற்சி 4 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் இருந்து வந்தவர்
ஒடுகத்தூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால், 4 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் இருந்து வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த அகரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 37), துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அந்த பகுதியில் உள்ள மராட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அரி என்பவரது மகள் ஹேமலதா (31) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு மனைவிவை பெற்றோரிடம் விட்டுவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி தனஞ்செழியன் வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டில் மனைவி இல்லாததால் மாமியார் வீட்டுக்கு சென்று ஹேமலதா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு மாமனார் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறினார்.
இதையடுத்து தனஞ்செழியன், மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மாட்டேன் என்றும், என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தன்னுடைய நிலத்துக்கு சென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story