திருமண கோஷ்டி சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் படுகாயம் மாப்பிள்ளை வீட்டிற்கு விருந்துக்கு சென்றபோது பரிதாபம்


திருமண கோஷ்டி சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் படுகாயம் மாப்பிள்ளை வீட்டிற்கு விருந்துக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 26 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

திருமண கோஷ்டி சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேத்துப்பட்டு, 

தேவிகாபுரத்தை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஞானசுந்தரி. இவர்களது மகள் மகாதேவி. இவருக்கும், பெரணமல்லூரை அடுத்த மேல்மட்டை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் சேகருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் திருமணத்தையொட்டி நேற்று பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு விருந்துக்கு செல்வதற்காக கொம்மனந்தல் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் லாரியில் சென்றனர்.

தச்சூரை அடுத்த முருகமங்கலம் அருகே லாரி வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு வழிவிட லாரி டிரைவர் இடதுபக்கமாக திருப்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலைகீழாக பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஞானசுந்தரி, பரிமளா, காயத்திரி, மகேஸ்வரி, எல்லம்மாள், கவிதா, தனம், சென்னம்மாள், தேவகி ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story