ராசிபுரம் அருகே போலீசார் துப்பாக்கி சூடு: ஆப்பக்கூடல் தொழில் அதிபரை கடத்திய 2 பேர் கைது
ராசிபுரம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி, ஆப்பக்கூடல் தொழில் அதிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கீழ்பவானி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும், விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். இவரை நேற்று முன்தினம் மர்ம கும்பல் திடீரென காரில் கடத்தி சென்று ரகசிய இடத்தில் வைத்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
மேலும், அந்த பணத்தை சேலம் அருகே அரியானூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்து தருமாறு தெரிவித்தனர். அதற்கு ரூ.5 லட்சம் தருவதாக சக்திவேலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதோடு இது தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க போலீசாரின் அறிவுரையின்படி சக்திவேலின் குடும்பத்தினர் ரூ.5 லட்சத்துடன் நேற்று முன்தினம் அரியானூர் அருகே வந்து காத்திருந்தனர்.
அதேசமயம், தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் ஆங்காங்கே நின்றவாறு கடத்தல் கும்பலை கண்காணித்தனர். சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரும் விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, மாறுவேடத்தில் இருந்த போலீசாரை கண்டதும் உஷார் ஆன கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் வந்த காரில் ஆட்டையாம்பட்டி சாலை வழியாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் நோக்கி தப்பி சென்றனர். இதனை கண்ட தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தில் அவர்களை விரட்டி சென்றனர்.
அப்போது, இரவு 7.45 மணியளவில் வெண்ணந்தூர் அடுத்த அலவாய்ப்பட்டி கிராமத்தில் கடத்தல் கும்பல் சென்ற காரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 5 பேர், இன்ஸ்பெக்டர் குமாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த இன்ஸ்பெக்டர் குமார், தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி 5 முறை சுட்டார். இதனால் பயந்துபோன கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கிருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்குள் ஓடினர். மற்ற 3 பேரும் இன்ஸ்பெக்டர் வந்த காரை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.
அந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் குமார், அந்த கும்பலை சேர்ந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அது அவர்கள் மீது படவில்லை. கார் கண்ணாடியில் குண்டு பாய்ந்தது. இருப்பினும், அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி வந்து இன்ஸ்பெக்டரை மீண்டும் தாக்க முயன்றது. இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் அருகில் இருந்த பக்கெட்டை எடுத்து கார் மீது வீசினார். அப்போது அந்த 3 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோரும் வெண்ணந்தூர் அடுத்த அலவாய்பட்டிக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதற்கிடையே, நாமக்கல்–சேந்தமங்கலம் சாலையில் சக்திவேலை விடுவித்துவிட்டு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர்.
இதையடுத்து தொழில் அதிபர் சக்திவேலை போலீசார் மீட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், தன்னை கடத்தியது யார்? என்று தனக்கு தெரியவில்லை என்றும், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை மட்டும் நேரில் பார்த்தது போல் உள்ளதாகவும் சக்திவேல் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிசூடு தொடர்பாக ராசிபுரம் அருகே உள்ள அலவாய்ப்பட்டியில் கோவை சரக ஐ.ஜி. பெரியய்யா, சேலம் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, சேலம் துணை கமிஷனர் தங்கதுரை உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட தறிக்கூட உரிமையாளர் மாணிக்கவாசகம் (38) ஆகியோரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உயர்அதிகாரிகளிடம் விளக்கி கூறினார். மேலும் அங்கு கிடந்த 3 குண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சேலம் மாவட்டம் மேட்டூர் வீரபாண்டி கட்டபொம்மன் நகரை சேர்ந்த இளங்கோ (40), வேலூர் மாவட்டம் ஆம்பூர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த பிரேம்குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும், தொழில் அதிபர் சக்திவேலையும் பவானி போலீசாரிடம் நாமக்கல் மாவட்ட போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஆப்பக்கூடல் காந்திநகரை சேர்ந்த குருசாமி மகன் நடராஜ் (34) என்பவரையும் ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, காரில் தப்பிச் சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். தொழில் அதிபர் சக்திவேல் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை சிலர் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.