சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்


சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:15 AM IST (Updated: 26 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சிலால்பகுதியில் நேற்று ஏற்பட்ட சாலை மறியல் காரணமாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் சிலர் அடிக்கடி நடக்கும் விபத்துகளால் சாலையில் பயணிக்கவும், நடக்கவும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அப்பகுதியில் வேகத்தை குறைக்க தடுப்பு வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன்படி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தடுப்புகளை வைத்தனர்.

இந்நிலையில் காரைக்குறிச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜராஜசோழன்(வயது 35) எதிர்பாராத விதமாக தடுப்பு மீது மோதி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தா.பழூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வைக்கப் பட்டிருந்த தடுப்பில் போதுமான ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப் படவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story