கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது; நாராயணசாமி எச்சரிக்கை


கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது; நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2018 5:00 AM IST (Updated: 26 Nov 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கடைகளை அடைக்க சொல்லி மிரட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சபரிமலை விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி முழுஅடைப்பு போராட்டம் (பந்த்) அறிவித்துள்ளது. இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது. பாரதீய ஜனதா கட்சியினர் வேண்டுமானால் கேரளா சென்று போராடட்டும். புதுவையில் போராட்டம் நடத்த எந்தவித முகாந்திரமும் இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினையும், பொதுமக்களின் மத சம்பந்தமாக உணர்வுகளையும் கேரள அரசு மதித்தாக வேண்டும். இதை தேவையில்லாமல் பாரதீய ஜனதா அரசியலாக்குகிறது. சட்டம் ஒழுங்கினை குலைக்க இப்போது முழுஅடைப்புக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள். புதுவையில் ஏற்கனவே நிறைய பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்காலில் கஜா புயலால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரண பணிகளை அரசு கவனித்து வருகிறது. ஆனால் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது மக்கள் விரோத செயல். போர்க்கால அடிப்படையில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம்.

இங்கு போராட்டம் நடத்துபவர்கள் காரைக்காலுக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கொடுத்தால் நல்லது. காங்கிரஸ் கட்சி சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரதீய ஜனதா கட்சி மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம். எங்களுக்கும் மத உணர்வுகள் உள்ளது.

யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள். இதுதொடர்பாக காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தகர்களையும் அழைத்து பேசி உள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story