ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டரிடம் மனு ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் கொடுத்தனர்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டரிடம் மனு ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் கொடுத்தனர்
x
தினத்தந்தி 26 Nov 2018 11:15 PM GMT (Updated: 26 Nov 2018 5:37 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், மடத்துப்பட்டி கிராம பொதுமக்கள், ஆத்தூர் குளம் கஸ்பா அனைத்து விவசாயிகள் அபிவிருத்தி நலச்சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தார்கள்.

ஒப்பந்ததாரர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த முறையில் பணிகள் செய்து வந்தோம். நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம். வதந்திகள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆலை மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் மாற்று வேலை இன்றி கஷ்டப்படுகிறோம். எனவே நல்ல முறையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் தூத்துக்குடியில் இயங்கி வரும் பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தின் உதவியுடன் சுயஉதவி குழுக்கள் மூலம் பயன்பெற்று வந்தோம். ஆலை மூடப்பட்ட பின்னர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்கள் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அந்த ஆலையை திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடத்துப்பட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரின் மிக அருகில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்களது கிராம தொழிலாளர்கள், குறிப்பாக டிரைவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வேறு வழிஇல்லாததால் சென்னை, விசாகப்பட்டினம், கேரளா போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். ஆலை மூடப்பட்டதால் எங்கள் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் கல்வி, மருத்துவம் போன்ற சமுதாய உதவிகளும் முற்றிலும் தடைபட்டு உள்ளது. நாங்கள் சொந்த ஊரில் வேலைவாய்ப்பை இழந்து போதிய வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கிராம மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்த இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல் விவசாயிகள் கொடுத்த மனுவில், உரத்தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தான் செல்கிறது. தற்போது ஆலை மூடப்பட்டதால் மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக உரம் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விலை உயர்வும் ஏற்பட்டு உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story