தொழில் அதிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
நெல்லையில் தொழில் அதிபரை வெட்டிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை டவுன் கல்லணை தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் டவுன் மேட்டு தெருவில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் டவுன் கிருஷ்ணபேரியை சேர்ந்த சின்னமாரி (வயது45), அருணாச்சலம் (48) ஆகிய 2 பேரும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு 2 பேரும் வேலையை விட்டு நின்று விட்டனர். அப்போது 2 பேரும் தாங்கள் பிளாஸ்டிக் நிறுவனத்தில் நீண்ட நாட்களாக வேலை செய்து வருவதால், குறிப்பிட்ட அளவு பணம் தரவேண்டும் என்று கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி தர்மராஜ், அவருடைய மகன் ஜவஹர் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் டவுன் மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோவில் அருகில் வந்தனர். அப்போது சின்னமாரி, அருணாச்சலம் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தர்மராஜை அரிவாளால் வெட்டினர். ஜவஹரையும் கம்பால் தாக்கினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தர்மராஜ் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபேரியை சேர்ந்த சின்னமாரி, அருணாச்சலம், ரமேஷ் (31), பூண்ரு அருணாச்சலம் (33), சதீஷ் (35), மகாராஜன் என்ற மாரிராஜ், பழைய பேட்டை செல்வகுமார் (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை முதன்மை சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஹேமானந்தகுமார் வழக்கை விசாரித்து சின்னமாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். அருணாச்சலம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு ஆகிவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு தனியாக பிரிக்கப்பட்டது. மற்ற 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ரவி ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story