ஏரல் அருகே கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை ஒரே நாளில் தீர்த்துக்கட்டியது அம்பலம்; 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ஏரல் அருகே கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகன் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 24-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வினோத் தன்னுடைய நண்பரான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடியின் (30) மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனை அறிந்த தனுஷ்கோடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வினோத்தை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான தனுஷ்கோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மேலமங்களகுறிச்சியில் வினோத் கொலை செய்யப்பட்ட சுடுகாட்டு பகுதியின் அருகில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.
இதுகுறித்து அப்பகுதியினர் ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 22) என்பதும், இவர் வினோத், தனுஷ்கோடி ஆகியோரின் நண்பர் என்பதும் தெரியவந்தது.
வினோத், தனுஷ்கோடி, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி திரிந்துள்ளனர். இவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இரவில் மது அருந்துவது வழக்கம். கடந்த 24-ந்தேதி வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே ராமச்சந்திரன் மாயமாகி உள்ளார். எனவே, வினோத்தை கொலை செய்தபோதே ராமச்சந்திரனையும் படுகொலை செய்துள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வினோத், ராமச்சந்திரன் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி தன்னுடைய நண்பர்களான வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு வரவழைத்து, கூலிப்படையை ஏவி, அவர்களை தீர்த்து கட்டி இருக்கலாம். பின்னர் கூலிப்படையினர் அவர்களது உடல்களை தனித்தனியாக வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் பரபரப்பு தகவலாக தனுஷ்கோடி, வினோத், ராமச்சந்திரன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் இரவில் அடிக்கடி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக்கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடியை கைது செய்த பின்னரே இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியும், அவருடைய நண்பரும் ஒரே நாளில் தீர்த்துக் கட்டப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story