பரமத்திவேலூர் அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர், கிளனர் பரிதாப சாவு


பரமத்திவேலூர் அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர், கிளனர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 27 Nov 2018 3:30 AM IST (Updated: 27 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர், கிளனர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

பரமத்திவேலூர், 

சேலத்தில் இருந்து கரூர் நோக்கி கூரியர் வேன் ஒன்று நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 62) என்பவர் ஓட்டி சென்றார். கோவிந்தம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (21) என்பவர் கிளனராக இருந்தார்.

இவர்களுக்கு உதவியாக கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த சரவணன் (22) என்பவர் உடன் சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது வேகமாக மோதியது.

இதில் வேனில் இருந்த ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றிய தகவல் அறிந்த பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமலிங்கம், சந்தோஷ்குமார் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள விசுவாம்பாள்சமுத்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரை கைது செய்தனர். நின்று கொண்டிருந்த லாரி மீது கூரியர் வேன் மோதி டிரைவர், கிளனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story