அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கியதற்காக: கோவை ரெயில் நிலையத்துக்கு 2-வது முறையாக தரச்சான்றிதழ்


அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கியதற்காக: கோவை ரெயில் நிலையத்துக்கு 2-வது முறையாக தரச்சான்றிதழ்
x
தினத்தந்தி 27 Nov 2018 3:15 AM IST (Updated: 27 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கியதற்காக கோவை ரெயில்நிலையத்துக்கு 2-வது முறையாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

கோவை, 

கோவை ரெயில்நிலையத்தில் இருந்து சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில், 30 ஆயிரம் பயணிகள் பயணிக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.200 கோடிக்கும் மேல் கிடைக்கிறது.

ரெயில்நிலையத்தை சுத்தமாக வைத்தல், பயணிகளின் தேவைகள், தங்கும் அறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கியதற்காக கோவை ரெயில்நிலையத்துக்கு கடந்த ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட மேலாண்மை சேவை (ஐ.எம்.எஸ்.) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இது கோவை ரெயில்நிலையத்தில் பயணிகள் செல்லும் பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டும் கோவை ரெயில்நிலையத்துக்கு தரச்சான்றிதழ் வழங்குவது குறித்து கடந்த 15-ந் தேதி தரச்சான்றிதழ் ஆய்வு அதிகாரி பி.கார்த்திகேயன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவை ரெயில்நிலையத்துக்கு 2-வது முறையாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை ரெயில்நிலையத்துக்கு கடந்த ஆண்டு தரச்சான்றிதழ் வழங்கியதுபோன்று இந்த ஆண்டும் தரச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரெயில்நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதி, சுகாதாரம், உணவகம், தங்கும் அறை, ரெயில்வே தொழில்நுட்ப பிரிவு, முன்பதிவு மையங்களில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குதல், தண்டவாள பராமரிப்பு, சரக்கு கையாளுதல், ரெயில்நிலையத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ரெயில் மாதிரி என்ஜின் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கியதற்காக கோவை ரெயில்நிலையத்துக்கு 2-வது முறையாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ் விரைவில் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படும்.

இந்த தரச்சான்றிதழானது தமிழ்நாட்டிலேயே 2-வது முறையாக கோவை ரெயில்நிலையத்துக்கு கிடைத்து இருப்பது பெருமையாக உள்ளது. அத்துடன் நிறுத்தாமல் கோவை ரெயில்நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, வரும் ஆண்டுகளிலும் பல்வேறு விருதுகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story